தமிழகம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ஓட்டுநர் இல்லாத ரயில்களை தயாரிக்க ரூ.946 கோடியில் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ரூ.946 கோடியே 92 லட்சம் மதிப்பில், ஓட்டுநர் இல்லாத 26 ரயில்களை தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, முதல் மெட்ரோ ரயில் வரும் 2024-ம் ஆண்டில் தயாரித்து வழங்கப்படவுள்ளது.

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சுமார் ரூ.63,200 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2016-க்குள் முடித்து, ரயில் சேவை தொடங்கும்போது, 138 மூன்று கார் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், ரூ.946 கோடியே 92 லட்சம் மதிப்பில், ஓட்டுநர் இல்லாத 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) தயாரிக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த ஒப்பந்தப்படி, முதல் மெட்ரோ ரயில் 2024-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதைத் தொடர்ந்து, ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும்.

இதன்பின்பு, மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் ஓர் ஆண்டுக்குள் பல்வேறு கட்டமாக மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கான மொத்த கால அளவு 40 மாதங்கள் என்றனர்.

SCROLL FOR NEXT