கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ.10,292 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் பணிபுரியும், முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் கூட்டுறவுத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் ஓராண்டில் நிறைவுபெறும். நிரந்தரக் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் இந்த கல்லூரியில் 3,000 மாணவ, மாணவிகள் பயில முடியும்.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கிராமத்தில் தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி நிறுவனம் நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுறவுக் கல்லூரி, கூட்டுறவு பட்டயப் படிப்புகளில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. தனியார் வங்கிகளைவிட கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் அதிகம் வழங்கப்படுகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இளைஞர்கள், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, நிலம் இல்லாதவர்களும் உறுப்பினர்களாக சேரலாம்.
கூட்டுறவு சங்கங்களில் நிதிமுறைகேடு என்பது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் உள்ளது. இதுவும் ஒழுங்குபடுத்தப்படும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு நிறுவனங்களின் நியாய விலைக் கடைகளில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசு ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்துள்ளோம்.
கூட்டுறவு வங்கிகளில் ரூ.65 ஆயிரம் கோடி டெபாசிட் உள்ளது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டில் ரூ.10,292 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கியுள்ளோம். நகைக்கடன் ரூ.32,000 கோடி வழங்கியுள்ளோம்.
இதுமட்டுமின்றி சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் தேசிய அளவில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவுத் துறை முதலிடம் பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன், இணைப் பதிவாளர் காந்திநாதன், பல்கலைக்கழகப் பதிவாளர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.