கரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஜோலார்பேட்டை -திருப்பதி பயணிகள் ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து சேவை, ரயில் மற்றும் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு, 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக முக்கிய ரயில் சேவை மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது, கரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத் தப்பட்ட ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் விரைவு ரயில் சேவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு இயக்கப்பட்டது.
அதேபோல, காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார யூனிட் விரைவு ரயில் சேவை நேற்று முதல் இயக்கப்படுகிறது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப் பட்ட ஜோலார்பேட்டை - திருப்பதி பயணிகள் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் ரயில்வே நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதி வரை செல்லும் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி வரை செல்லும் பயணிகள் ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.
இதற்கான விழா ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் இன்ஜினுக்கு வாழை மரங்கள், மலர் மாலை கட்டி, அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த பயணிகள் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதை ரயில் பயணிகளும், ஆன்மிக வாதிகளும் வரவேற்றுள்ளனர்.