உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி யுள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர் பாக தமிழகம், கர்நாடக மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய நீர்ப்பாசனத் அமைச்சர் உமாபாரதி தலைமை யில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந் தது. உடல்நலக்குறைவு காரண மாக முதல்வர் ஜெயலலிதா இதில் பங்கேற்கவில்லை. அவரது சார் பில் பொதுப்பணித்துறை அமைச் சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வாசித்தார். அதன் விவரம்:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேவையான நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிடவில்லை. கர்நாடக அரசின் இந்த நட வடிக்கை இந்திய அரசியல் சாசனத் துக்கு எதிரானது. அதோடு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்புக்கும் செயல் ஆகும். அத்துடன் கர்நாடகாவில் வன் முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர் களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பதி வெண்களைக் கொண்ட வாகனங் கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்களை தடுக்க கர்நாடக அரசு உறுதி யான நடவடிக்கைகளை எடுக்க வில்லை. ஆனால், தமிழகத்தில் கன்னடர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒரு தொழில்முறையிலான, நடு நிலையான, தொழில்நுட்ப அமைப்புதான் இந்த விஷயத்தில் பயனாளி மாநிலங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். எனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள 4 வார அவகாசம் வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், உச்ச நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுகளின்படி தமிழகத் துக்கு தரவேண்டிய நீரையும், காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் கர்நாடகம் உடனடியாக திறந்து விடுவதை உறுதிசெய்யு மாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முதல்வரின் உரை யில் கூறப்பட்டுள்ளது.