தமிழகம்

குடியிருப்பு முதல் விளையாட்டு வசதி வரை: சென்னை வெளிவட்ட சாலையை மேம்படுத்தும் சிடிஎம்டிஏ

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை வெளிவட்ட சாலையை மேம்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சிடிஎம்டிஏ அறிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், புறநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வெளிவட்ட சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வண்டலூர் தேசிய நெடுஞ்சாலை, நசரத்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை, நெமிலிச்சேரியில் தேசிய நெடுஞ்சாலை, நல்லூரில் தேசிய நெடுஞ்சாலை, மீஞ்சூரில் திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையை இணைக்கும் வகையில் 62 கீ.மீ நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சாலையில், சாலை மற்றும் தொடர் வண்டி அமைப்பதற்கு 72 மீட்டர் அகலமும், மேம்பாட்டு பணிகளுக்கு 50 மீட்டர் அகலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 50 மீட்டர் அகலத்தில் பல மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, தோட்டக்கலை, பால்வளத் துறை, விளையாட்டு மீன்வளம் உள்ளிட்ட 22 துறைகளுடன் சிஎம்டிஏ ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை சிஎம்டிஏ தொடங்கியுள்ளது. இதில் குடியிருப்புத் திட்டம், குடிசைத் தொழில் உள்ளிட்ட தொழிற்சாலைகள், விளையாட்டு வசதி போன்ற பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. எனவே, இது தொடர்பான கருத்துகளை சிஎம்டிஏ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT