சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம்.
திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று. மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரம்:
- 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது.
- இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
- செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி
- புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
- வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
- வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.
- வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி
- மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்
- ஊட்டச்சத்தை உயர்த்துதல்
- வருகை அதிகரித்தல்
- வேலைக்கும் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைத்தல்
- உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் FSSAI நெறிமுறைகளின் படி இருக்க வேண்டும்
- உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருட்களை சேர்க்கக் கூடாது.
- உள்ளூர் சமையல் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்
- காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்
- பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்
- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்
இந்த திட்ட செயல்பாட்டை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அமைக்க வேண்டும்.