தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இன்று மாலைக்குள் வருகை: மாமல்லபுரத்தில் அமைச்சர் மெய்யநாதன் தகவல்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் இன்று (27-ம் தேதி) மாலைக்குள் வந்து சேருவார்கள் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 வெளிநாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது கரோனா பரவல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டிக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும், செஸ் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் இன்று மாலைக்குள் வந்து சேர்ந்துவிடுவர். அவர்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பு அதிகாரிகள் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒலிம்பிக் சுடர் இன்று மாலை போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு வீரர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை வழங்குவதற்காக, போட்டி அரங்க வளாகத்தில் பிரத்யேக உணவு பொருட்கள் விற்பனையகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்திலான பல்வேறு வெளிநாடுகளின் உணவு பொருட்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

SCROLL FOR NEXT