தமிழகம்

திருவள்ளூர் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்: 700-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு நிதி உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி, நேற்று முன்தினம் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிகிறது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவியின் சகோதரர் சரவணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. உறவினர்களும் திமுக, விசிக, புரட்சி பாரதம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரமுகர்களும் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை 10.30-க்கு முடிந்தது. இருப்பினும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், சிபிசிஐடி விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உடலைப் பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார், எஸ்பிக்கள் சீபாஸ் கல்யாண், கார்த்திகேயன் மற்றும் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் உள்ளிட்டோர் மாணவியின் சகோதரர் சரவணன் உள்ளிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு பணி வழங்கவும் விசாரணையை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததையடுத்து உறவினர்களிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, 12.40 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமமான தெக்களூருக்கு மதியம் 2 மணிக்கு உடல் வந்தது. வீட்டில் வைக்கப்பட்ட மாணவியின் உடலுக்கு, உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாலையில் அங்குள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்புக்காக கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT