திருச்சி திருவெறும்பூர் அருகே நண்பரைக் கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர், 2012-ம் ஆண்டு முதல் இதுவரை 8 பேரைக் கொன்று, புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகேயுள்ள வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்த முத்தையன் மகன் தங்கதுரை(34). ரயில்வே திட்டப் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வந்தார். இந்நிலையில், புதிதாக கார் வாங்கச் செல்வதாகக் கூறி கடந்த 7-ம் தேதி வெளியில் சென்ற தங்கதுரை, பின்னர் வீடு திரும்பவில்லை.
ஒரு வாரத்துக்குப் பின்னர், கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்காலில் தங்கதுரை உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார் சடலத்தை தோண்டி யெடுத்து, விசாரணை நடத்தினர். அதில், தங்கதுரையின் நகைகள் மற்றும் செல்போன் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தங்கதுரையின் செல்போன், அவரது நண்பர் கிருஷ்ணசமுத்திரம் சப்பாணியிடம்(35) இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் நேற்று அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, நகைக்கு ஆசைப் பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததாக, சப்பாணி ஒப்புக்கொண் டார். மேலும், இதேபோல திருவெறும்பூர் பகுதியில் பலரைக் கொலை செய்து, நகைகளைப் பறித்துச் சென்றதாகவும் சப்பாணி தெரிவித்தார். இதையடுத்து, ஏஎஸ்பி கலைச்செல்வன், ஏடிஎஸ்பி நடராஜன், இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான 3 தனிப்படையினர், சப்பாணியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சப்பாணி கூறிய பகுதிகளில், ஏதேனும் மர்ம சாவு நடைபெற்றுள்ளதா, ஆட்கள் மாயமாகியுள்ளனரா என்று, பழைய ஆவணங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுவை நேற்று சந்தித்து, இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மேலும், சப்பாணி அடையாளம் காட்டியுள்ள இடங்களில் தோண்டிப் பார்க்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “ஏழ்மையான குடும்பத் தைச் சேர்ந்த சப்பாணிக்குத் திருமணமான சில மாதங்களி லேயே, அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தனியே வாழ்ந்து வந்த அவர், நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையை கொலை செய்துள்ளார்.
கடந்த 2012-ல் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா(70), பாப்பாக்குறிச்சி அற்புதசாமி(70), 2015-ல் கீழகுமரேசபுரம் விஜய் விக்டர்(27), கிருஷ்ணசமுத்திரம் தெக்கன்(75), நடப்பாண்டில் கூத்தைப்பார் வடக்கு ஹரிஜனத் தெருவைச் சேர்ந்த சத்தியநாதன்(45), உப்பிலி யபுரம் வடகாடு குமரேசன்(50) ஆகியோர் உட்பட 8 பேரை கொலை செய்துள்ளதாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த 8 பேரில் கோகிலாவைத் தவிர மற்ற அனைவரையும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்த தாகவும், அவர்களிடமிருந்து நகைகள், பணத்தைக் கொள்ளை யடித்ததாகவும் அவர் தெரிவித்துள் ளார். மேலும், 5 பேரின் உடலை தனது கிராமத்தின் வெவ்வேறு பகுதிகளில் புதைத்து வைத்திருப் பதாகவும் கூறியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் இந்த தகவல்களில் ஓரளவுக்கு உண்மை இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். எனவே, விரைவில் அப்பகுதியில் தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளோம்.
சப்பாணி கொலை செய்துள்ள தாக கூறியுள்ளவர்களில், கோகிலாவைத் தவிர, மற்ற அனைவருமே காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர். இது தொடர்பான வழக்குகள், திருவெறும்பூர், உப்பிலியபுரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன” என்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி டம் கேட்டபோது, “தங்கதுரை கொலை வழக்கில் சப்பாணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், சில கொலைகளில் இவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது” என்றார்.