தமிழகம்

இல்லம்தோறும் தேசியக் கொடி திட்டத்தால் இளைஞர்கள் எழுச்சி பெறுவர்: ஆளுநர் தமிழிசை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும், இத்திட்டம் மூலம் வீடுகளில் ஏற்றப்படும் கொடி இரவிலும் பறக்கலாம்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தின விழா கடற்கரை சாலை பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் . செல்வம், பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள் காவல்துறை உயரதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியது: "நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு புதுச்சேரி அரசு சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன். இந்தியாவில் மிகப் பெரிய சமூகப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இன்று குடியரசுத் தலைவராக பரிமளிக்க முடியும் என்றால் அதுவே இந்திய குடியரசின் மாண்பு. இதனை நடத்திக் காண்பித்த பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

திரவுபதி முர்மு போன்றவர்கள் குடியரசுத் தலைவராக வந்திருக்கும் போது அடித்தட்டில், மிகவும் பின்தங்கிய, கிராமங்களில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூட மிகப் பெரிய நம்பிக்கை வரும். அதனால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று கார்கில் வெற்றி தினம். அனைவரும் ராணுவ வீரர்களையும் நமது வெற்றி தினங்களையும் கொண்டாடிப் பழக வேண்டும். அதனால்தான் மூவர்ண கொடி குழந்தைகள் மனதிலும் இளைஞர்கள் மனதிலும் பதிய வேண்டும் என்பதற்காக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதனை மாநில அரசும் நடைமுறைப்படுத்த இருக்கிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும். இதை தீர்க்கமாக முன்னெடுத்துச் செல்லலாம் என்று இருக்கிறோம். இல்லம் தோறும் தேசியக் கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும். தேசியக் கொடியை இரவில் ஏற்றக்கூடாது என்பார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகளில் ஏற்றப்படும் கொடி இரவிலும் அங்கேயே பறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நமது தேசியக் கொடி எல்லா இல்லங்களிலும் பட்டொளி வீசி பறக்கும்போது இந்த சுதந்திர தினம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்" என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT