தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் | ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து சுற்றுலா நட்பு வாகனம் திட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து சுற்றுலா நட்பு வாகனம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளவும், போட்டிகளை பார்க்கவும் பல்வேறு நாடுகளிலிருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள 50 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கடந்த மாதம் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ச்சியாக சுற்றுலா நட்பு வாகனம் என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள 25 ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கும், கனிவாகவும் மரியாதையுடனும் சுற்றுலா பயணிகளுடன் பழகுவதற்கும் புத்தாக்க பயிற்சி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டு சுற்றுலா நட்பு வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சுற்றுலா பயணிகளை கைகூப்பி இன்முகத்துடன் வரவேற்கவும், கனிவாகவும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT