தமிழகம்

தற்கொலை தீர்வல்ல: மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு

செய்திப்பிரிவு

மாணவ, மாணவிகளிடம் அதிகரித்துவரும் தற்கொலை மனபான்மை குறித்து மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு கூறியதாவது: தற்கொலை செய்து கொள்வதில் மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் தென்படுகிறார்கள்.

தற்கொலைக்கு உடலியல், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்து காரணங்கள் இருக்கின்றன. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதைப்போல், தற்கொலைக்கான காரணத்தை அறிய உளவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும்.

அப்படி நடத்தப்படும் ஆய்வு அந்த நபர்களின் கடந்த 6 மாத வாழ்வியலை அடிப்படை கொண்டதாக இருக்க வேண்டும். இளைஞர்களின் தற்கொலைக்கு பெரும்பாலும் உடலியல் காரணம் முதன்மையாக உள்ளது. அதை சார்ந்து உளவியலும், சமூகவியலும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

அந்த வயதில்தான் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நடக்கின்றன. மனநல குறைபாடும், மனநல பாதிப்பும் வளர் இளம் பருவத்தில்தான் துளிர் விடுகிறது. எனவே, தற்கொலையும், தற்கொலை முயற்சிகளும் இந்த வயதில் அதிகம் தென்படுகின்றன. ஒரு தற்கொலை நடக்கும்போது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பாலியல் காரணிகளையே பெரிதுபடுத்திக் காட்டப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தற்கொலை பிரபலப்படுத்தப்படுவதால், இரண்டும்கெட்டான் நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் ஏன் நாமும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று ஒருபக்கமாக முடிவு எடுக்க வாய்ப்புண்டு. தற்கொலைகளை பிரபலப்படுத்தக்கூடாது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு இல்லை என்பதைத்தான் நாம் ஊக்கப்படுத்தி புரிய வைக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT