கீழடி கிராமத்தில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசினை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வைகைக் கரை கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் அழிந்துபோன ஒரு பெரும் நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டிடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருட்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன.
அகழ்வாய்வில் மொத்தம் 5 ஆயிரத்து 300 பொருட்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன்மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன.
கீழடியில் கிடைக்கப் பெற்ற அரிய பொருட்களை பாதுகாத்து வைக்க கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான அரும்பெரும் தொல்பொருட்கள் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கிடங்கில் போட்டுவைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரீகத்துக்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால் அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும். எனவே, தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்ச்சியோடு கீழடி கிராமத்திலேயே இடம் ஒதுக்கி தொல்பொருட்களுக்கான கள அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்திட ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அதற்கான அறிவிப்பினைச் செய்து, தமிழர் நாகரீகத்துக்கான வரலாற்றுக் கடமையினை செம்மையாக ஆற்றிட வேண்டும் என்ற தமிழ் ஆர்வலர்களின் விருப்பத்தைப் பிரதிபலித்து வலியுறுத்துகிறேன்.
கடந்தாண்டுகளில் ஆறுநாட்கள், ஒருவாரம், 10 நாட்களுக்கு முன்பு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலை மனதிலே கொண்டு போனஸ் அறிவித்திருக்கிறார்கள். தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி போனஸை அறிவிக்கும் ஜனநாயக ரீதியான நடைமுறைக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தன்னிச்சையாகச் செய்யப்பட்டிருக்கும் அறிவிப்பு கண்டிக்கத்தக்கதாகும்.
ஆவின் பால்விலையை லிட்டர் ரூ.25 ஆகக் குறைக்கப் போகிறோம், உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்யும் என்றெல்லாம் சொன்ன அதிமுக ஆட்சியினர் இதைப் பற்றியெல்லாம் சிந்தனை சிறிதுமின்றி பால் உற்பத்தியாளர்கள் பால் நுகர்வோர் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் உதவித் தொகையைப் பெற அவர்கள் தங்களின் வங்கி ஏ.டி.எம். அட்டை, அதன் ரகசிய எண் ஆகியவற்றை வங்கி முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் இக்கொடுமை உடனடியாகக் களையப்பட வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.