தருமபுரி மாவட்டம் நாகமரை அருகே காவிரியாற்று நீரில் மயானம் மூழ்கியதால் சாலையில் சடலங்களை தகனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென் னாகரம் வட்டம் ஏரியூர் அடுத்த மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சித்திரப்பட்டி, செல்ல முடி, ஏர்கோல்பட்டி உள்ளிட்ட கிராமங்கள். இதில் சித்திரப்பட்டி கிராமம் சற்றே மேடான பகுதியிலும், விவசாய நிலங்கள் தாழ்வான பகுதியிலும் உள்ளன.
மேட்டூர் அணை முழுமையாக நிரம்பும்போது காவிரியாற்றின் தண்ணீர் சித்திரப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதி முழுக்க தேங்கி விடும். ஓரிரு மாதங்கள் வரை இவ்வாறு தாழ்வான பகுதி முழுக்க அணை நீர் தேங்கி நிற்கும். அணையில் நீர்மட்டம் குறையும்போது தான் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள தண்ணீர் படிப்படியாகக் குறையும்.
இவ்வாறு தேங்கும் தண்ணீர் சித்திரப்பட்டி கிராமத்தின் மயானத்தையும் மூழ்கடித்து விடுகிறது. மயானம் தண்ணீரில் மூழ்கியிருக்கும் காலங்களில் சித்திரப்பட்டியில் உயிரிழப்புகள் நிகழ்ந்தால் சடலங்களை மயானத்தில் அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ முடியாதநிலை ஏற்படுகிறது. எனவே, சாலையோரத்திலேயே சடலங்களை எரியூட்டும் நிலை ஏற்படுகிறது. தற்போது அணையில் நீர் நிரம்பி உள்ளதால் மயானத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சித்திரப்பட்டி கிராம மக்கள் அவதியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நடராஜன் கூறியது:
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் காலங்களில் சித்திரப்பட்டி கிராமத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தால் நல்லடக்கம் செய்ய இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மயானம் முழுக்க தண்ணீர் தேங்கியிருப்பதால், மயானத்தின் அருகில் தார்சாலையின் ஓரமாக சடலத்தை தகனம் செய்கின்றனர்.
அருகிலுள்ள வேறு கிராம மயானங்களுக்கு சடலத்தை எடுத்துச் செல்லவும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. சாலையிலேயே சடலங்களை எரிப்பதால் சித்திரப்பட்டி, ஏர்கோல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து செல்லமுடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவியர் மயான பகுதியைக் கடந்து செல்ல அச்சப்படு கின்றனர். இதுதவிர, சடலத்தை எரிப்பதால் சாலையும் சேதம் அடை கிறது.
எனவே, சித்திரப்பட்டி மயானத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் மண் நிரப்பி சற்றே உயரமாக்கி அந்த இடத்தில் தகன மேடையை அரசு சார்பில் அமைத்துக் கொடுத்தால் இப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எனவே, அதிகாரிகள் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தந்து உதவ வேண்டும். இவ்வாறு கூறினார்.