தமிழகம்

மண்டல குழுவில் பங்கேற்க சென்ற தாம்பரம் திமுக கவுன்சிலரை சிறைவைத்ததாக போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

செம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சியின் 3-வது மண்டலத் தலைவராக இருப்பவர் ஜெயபிரதீப் சந்திரன். இவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மண்டலக் குழு தலைவராக உள்ளார்.

பதவியேற்றது முதலே இவரை பணி செய்யவிடாமல் திமுக கவுன்சிலர்கள் பிரச்சினை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று மண்டலக் குழுக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் 9 பேர் பங்கேற்கவில்லை.

போதிய எண்ணிக்கை இல்லாததால் மறுதேதி குறிப்பிடாமல் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட 43-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகனை பங்கேற்கவிடமால் திமுகவினர் சிறை வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிட்லபாக்கம் போலீஸில் ஜெகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், தன்னை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்று பல்லாவரம் எம்எல்ஏ அலுவலகத்தில் 11 மணி வரை அடைத்து வைத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT