திருவள்ளூர்: திருவள்ளூர் கீழச்சேரி பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கீழச்சேரியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 12-ம் வகுப்பு படிக்கிற மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்தச் சம்பவம் குறித்து எனது கவனத்துக்கு வந்தவுடனே, காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் சரக டிஐஜி, சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், இந்த வழக்கு முழுக்க முழுக்க சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. சம்பவம் குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை தரப்பில் சிபிசிஐடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் எதுவும் மறைக்கப்படவில்லை. வெளிப்படத்தன்மையான விசாரணைக்காகவே சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் உடல் தூக்கிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப்பின் இதுதொடர்பான காரணங்கள் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
காவல் துறை டிஐஜி சத்யபிரியா கூறியது: " இன்று காலை உடனடியாக வந்த உள்ளூர் போலீசார், காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர், அதன்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். சிபிசிஐடி இனி இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிடுவர். சம்பந்தப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இன்றேகூட மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்படும்.
மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் அனைவரும் இங்குதான் உள்ளனர். அவர்களிடம் அனைத்தையும் எடுத்து கூறியுள்ளோம். இதில் வேறு எந்தக் குழப்பமும் கிடையாது.
காவல் துறையின் வேண்டுகோள் என்னவென்றால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். ஒரு சிலர் வேறு வேறு விதமாக இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். தேவையற்ற இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். எனவே, ஊடகங்கள் சரியான செய்திகளை தெரியப்படுத்துங்கள்" என்று அவர் கூறினார்.
விசாரணை அதிகாரி நியமனம்: திருவள்ளூரில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியாக, திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.