சென்னை: கள்ளக்குறிச்சி கலவர விவகாரம் தொடர்பான விசாரணையை முடுக்கி விடும் வகையில் சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 55 போலீஸாரை கூடுதலாக நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் 3-வது மாடியிலிருந்து விழுந்து இறந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை மாணவியின் பெற்றோர் ஏற்கவில்லை. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில், கடந்த 17-ம் தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக மாறியது.
இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பேருந்துகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் க்ரைம் போலீஸாரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு குழுவில் மேலும் 55 போலீஸாரை நியமனம் செய்து தமிழக காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 காவல் ஆய்வாளர்கள் உட்பட 55 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கலவரம் தொடர்பாக 3 பிரிவுகளாக பிரிந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.