மதுரை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக-வில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் அழகிரி ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
நூறு உறுப்பினர்களைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் தற்போது திமுக-வுக்கு 13 உறுப் பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் அழகிரியோடு இருந்தவர்கள் தான் என்றாலும் அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு இவர்களில் பெருவாரியானவர்கள் ஸ்டாலின் அணிக்கு மாறிவிட்டனர். இருப்பினும் எம்.எல்.ராஜ், நன்னா, ’குடைவீடு’ அருண்குமார், முபாரக் மந்திரி ஆகியோர் அழகிரி பக்கமே நிற்கிறார்கள். இவர்களில் எம்.எல்.ராஜும் முபாரக் மந்திரியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
இந்த நிலையில், தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை வாய்ப்பளிக்க மறுத் தாலும் அழகிரி ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்க தயா ராகி வருகிறார்கள்.
இதுகுறித்துப் மதுரை திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது; 2001 உள்ளாட்சி தேர்தல் சமயத்திலும் அழகிரியும் அ வரது ஆதரவாளர் களும் இதேபோல் கட்சியைவிட்டு ஒதுக் கி வைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது, தனது ஆதரவாளர் களை அழகிரியே சுயேச்சையாக போட்டியிட வைத்தார். அழகிரி தரப்பில் போட்டியிட்டவர்களில் கோபிநாதன், மிசா பாண்டியன், வி.கே.குருசாமி, அப்துல்காதர் ஆகியோர் வெற்றியும் பெற்றனர். அதன்பிறகு நடந்த துணை மேயர் தேர்தலில் அழகிரி ஆதரவாளர்களும் கைகொ டுத்ததால் தான் திமுக வேட்பாளர் சின்னச்சாமி வெற்றிபெற முடிந்தது.
அன்றைக்கு அழகிரி அணியில் இருந்த மிசா பாண்டி யன், வி.கே.குருசாமி போன்றவர்கள் இப்போது ஸ்டாலின் பக்கம் நிற்கிறார்கள். இந்தத் தேர்தலில் மதுரை மேயர் பதவிக்கு மாவட்ட துணைச் செய லாளர் சின்னம்மாள் சின்னச்சாமி, தலைமைச் செயற்குழு உறுப் பினர் வி.கே.குருசாமியின் மகளும் முன்னாள் மண்டலத் தலைவருமான விஜயலெட்சுமி, இன்னொரு தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமின் மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
மூப்பு அடிப்படையில் பார்த்தால் சின்னம்மாள் சின்னச்சாமிக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. எனினும் பி.டி.ஆரின் மகனும் எம்.எல்.ஏ-வுமான பி.டி.ஆர்.பி.தியாகராஜன் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். மாநகர் திமுக-வில் முக்கிய முடிவுகள் அனைத்தும் இவரைக் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது.
எனவே, படித்த தகுதியான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என தியாகராஜன் நினைத்தால் அதுவும் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையில், அழகிரி இந் தத் தேர்தலில் இதுவரை எந்த அசைவும் காட்டாமல் இருக்க்கிறார். எனினும், அவரது ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்க தயா ராகி வருகிறார்கள். இதில், முபாரக் மந்திரி மற்றும் நன்னாவின் வார்டுகள் பொதுவார்டுகளாகவே தொடர்வதால் அவர்களே களத்தில் இறங்குகிறார்கள். நன்னா அழகிரி விசுவாசியாக இருந்தாலும் கட்சியில் வாய்ப்புக் கேட்டிருக்கிறார்.
அருண்குமார் மற்றும் எம்.எல்.ராஜின் வார்டுகள் பெண் களுக்கான வார்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன. எனினும் அருண்குமார் தனது அம்மாவை களமிறக்க தயாராகிறார். இந்த மூவருக்குமே கட்சியைக் கடந்து சொந்த செல்வாக்கு இருப்பதால் வெற்றிபெறு வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. அப்படி வெற்றிபெற்று மேயர் தேர்தலில் திமுக-வுக்கு இழுபறி நிலை ஏற்பட்டால் 2001-ல் ஏற்பட்டதுபோல அழகிரி ஆதரவாளர்களின் தயவை திமுக நாடவேண்டி இருக்கும். இவ்வாறு தெரிவிக்கிறது மதுரை திமுக வட்டாரம்.
இதுகுறித்து முபாரக் மந்திரியிடம் கேட்டபோது, ’’நான் அழகிரி அண்ணனை பார்க்கவில்லை. அருண்குமார் அழகிரி அண்ணனைப் பார்த்து தனது விருப்பத்தைச் சொல்லி இருக்கிறார்.
‘என்னை எதிலும் இழுத்து விடாதீர்கள்’ என்று மட்டும் அவரிடம் அண்ணன் சொல்லி இருக்கிறார். நான் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி. எம்.எல்.ராஜ் அவரது வீட்டு பெண்களில் யாரையும் நிறுத்துவதாக தெரியவில்லை. கட்சியில் மறுத்தாலும் அருண்குமாரின் அம்மாவும் நன்னாவும் நிச்சயம் சுயேச்சையாக போட்டியிடு வார் கள்’ என்றார்.