தமிழகம்

மணல் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு: வைகோ தகவல்

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரிகள் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய் யக் கோரி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, “தமிழகத்தில் தொடர்ந்து மணல் அள்ளப் படுவதால் நீராதாரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக மணல் குவாரி அமைக் கும் முடிவைக் கைவிட வேண்டும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி டி.கே.ரங்கராஜன் எம்பி பேசும்போது, “கனிம வளத் துறை யில் உள்ள சில சட்டங்கள், மணல் கொள்ளைக்கு வழிவகுக்கின்றன. அந்த சட்டங்களைத் திருத்தி, மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்” என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, “தமிழகத் தில் கடந்த 25 ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. விதிகளை மீறி, 15 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 33 ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுகிறது. இதனால், கடும் பாதிப்புகள் ஏற்படும். ஆண்டுக்கு 15 லட்சம் லோடு மணல் அள்ளப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகமிழைத்து வருகிறது. இந்தப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, ஆவணப்பட இயக்குநர் திருநங்கை ரோஸ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகி பாரதிசெல்வன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி எம்.எம்.பாஷா, தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

SCROLL FOR NEXT