தமிழகம்

சுற்றுச்சூழலை மேம்படுத்தி சுகாதாரத்தைக் காக்க: விளைநிலத்தை வேம்புக் காடாக மாற்றிய கல்லூரி பேராசிரியர்

கே.சுரேஷ்

சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுகாதாரத்தைக் காக்கவும் தனது சொந்த நிலத்தை வேம்புக்காடாக மாற்றியுள்ளார் அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஆர்.கருப்பையா.

சுற்றுச்சூழலைப் பாதுகாப் பதோடு, மருத்துவப் பயன்களை அதிகமாக தரக்கூடியது வேம்பு. இவை பெரும்பாலும் வீட்டைச் சுற்றிலும் தேவைக்கேற்ப நடப்படும். மற்றபடி குளக்கரை, சாலையோரங்களில் அதிகமாக நடப்படும். எனினும், தனது விளைநிலத்தையே வேம்புக்காடாக மாற்றுவது என்பது அரிதான ஒன்றாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே உள்ள தக்கிரிப்பட்டியில் தனது நிலத் தில் வேம்புக்காட்டை உருவாக்கி யுள்ளார் அதே கிராமத்தைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான ஆர்.கருப்பையா(54).

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாறைகள் நிறைந்த பகுதியாக உள்ள தக்கிரிப்பட்டியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் சிறுதானியங்களை பயிரிடுவதுகூட கடும் சவாலாக உள்ளது. இதனால், பெரும்பாலான நிலங்கள் தரிசாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில், கல்லூரி மாணவராக இருந்தபோது தோட்டத்தில் கால்நடை தீவனப் புல் மரத்தை நல்ல முறையில் வளர்த்ததற்காக திருச்சியில் வனத் துறையினர் சார்பில் எனக்கு பரிசு வழங்கப்பட்டது. அதுவே, மரம் வளர்ப்பு மீதான என் ஆர்வத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது.

அதன்பிறகு தக்கிரிப்பட்டி, காவேரி நகர் பகுதியில் உள்ள பொது இடங்களிலும், அதே கிராமத்தில் உள்ள வேளாண் குளத்திலும், தக்கிரிப்பட்டி குளத்திலும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டேன். அதில், சுமார் 200 கன்றுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பொது இடங்களில் மரக்கன்று நடுவதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, விதைப்புக்காக புங்கன், வேம்பு போன்ற மரங்களின் விதைகளைச் சேகரித்து விநியோகிப்பது, மரக்கன்றுகளை விநியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

3 ஆண்டுகளில்

எனக்குச் சொந்தமான 2 ஏக்கர் விளைநிலத்தில் கடந்த 2013-ல் தலா ரூ.60 விலையில் 500 வேப்ப மரக் கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்தேன். 3 ஆண்டுகளில் என் வயல் பசுஞ்சோலையாக மாறியுள்ளது. தொடக்கத்தில் தண்ணீர் ஊற்றினேன். கடந்த 6 மாதங்களாக தண்ணீரும் ஊற்றுவதில்லை. தற்போது காய்ப்பு தொடங்கிவிட்டது.

மருத்துவக் குணம்

வேம்பின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் நிறைந்தவை. மரத்திலிருந்து கீழே விழும் பழங்களின் விதைகளைச் சேகரிக்கும் போது, அப்பணியில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

தற்காலத்தில், வேம்பு அரிதாகி வருகிறது. ஆனால், அதன் தேவையோ அதிகரித்து வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு விதைகளை விற்பனை செய்யலாம். வேம்புக் காட்டில் ஏராளமான பறவைகள் கூடுகட்டி வசிக்கத் தொடங்கிவிட்டன.

இந்தப் பறவைகள் மூலம் விதை பரவலாக்கம் செய்யப்படும். அதன்மூலம் இப்பகுதியில் இயற்கையாகவே வேம்புக் காடு உருவாகிவிடும். என் நோக்கமும் நிறைவேறும் என நம்புகிறேன்.

தைல மரங்கள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே, அதற்கு மாற்றாக, அதைப்போலவே வேப்ப மரங்களை நேராக வளர்த்து விற்றால் அதைவிட கூடுதலான விலைக்கு விற்பனை செய்யலாம், லாபமும் அதிகரிக்கும்.

நான் உருவாக்கியுள்ள வேம்புக்காட்டால் என் குடும்பத் தினருக்கு மட்டுமல்லாமல், இப்பகுதியினருக்கே ஆரோக்கியம் கிடைக்கிறது. சுற்றுச்சூழலும் மேம்படுகிறது. இதை மற்றவர்களும் பின்பற்றினால் இவ்வையகமே சுகாதாரமாகும் என்றார்.

          
SCROLL FOR NEXT