வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ''தெலங்கானா மாநிலத்தில் நிலப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மேகக் கூட்டம் அதிக அளவில் திரண்டுள்ளன. ஆந்திரத்தை ஒட்டியுள்ள திருத்தணி, திருவள்ளூர் போன்ற பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்'' என்று கூறினார்.