நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் சேலம், நாமக்கல் உள்பட 4 மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சேலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார். உடன் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

நமக்கு நாமே திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியை பயன்படுத்த திட்டமிட வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு

செய்திப்பிரிவு

சேலம்: ‘நமக்கு நாமே திட்டத்தில் ரூ.400 கோடி இருப்பதால், உள்ளாட்சிகள் இதனைப் பயன்படுத்தி, தங்கள் பங்களிப்புடன் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட வேண்டும்’ என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தினார்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதியினை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு நேரடியாகவும், உடனடியாகவும் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடியும், சிறப்பு நிதியாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.890 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.400 கோடி இருப்பதால், உள்ளாட்சிகள் இதனைப் பயன்படுத்தி, தங்கள் பங்களிப்புடன் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட வேண்டும்.

தமிழகத்தில் சாதிப் பாகுபாடின்றி மின் மயானம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு 75 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நடப்பாண்டு மேலும் 75 இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. நகராட்சித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), சாந்தி (தருமபுரி), மேயர்கள் ராமச்சந்திரன் (சேலம்), சத்யா (ஓசூர்), மாநகராட்சி ஆணையர்கள் கிறிஸ்துராஜ் (சேலம்), பால சுப்பிரமணியன் (ஓசூர்), எம்எல்ஏ.,-க்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூர்), ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), வெங்கடேஷ்வரன் (தருமபுரி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலகல கூட்டம்

மண்டல அளவிலான கூட்டம் என்பதால், 4 மாவட்டங்களைச் சேர்ந்த மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், அலுவலர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளை உரிமையோடு அண்ணன் என்று விளித்து, அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அமைச்சர் கே.என்.நேருவோ, ‘ஏம்ப்பா...நகராட்சிக்கு புது கட்டிடம் வேண்டுமா? வேறென்ன வேண்டும்’ என்று கேட்டதுடன், அமைச்சர்கள், எம்எல்ஏ.,-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட அனைவரிடமும் நகைச்சுவையாகப் பேசி, கோரிக்கைகளை கவனமாக குறிப்பெடுத்து வந்தார். இதனால், காலையில் தொடங்கிய கூட்டம், மதிய வேளை வரையிலும் கலகலப்பாகவே நீடித்தது.

SCROLL FOR NEXT