திருச்சி: ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய பாதுகாப்பு அளிக்க முன்வராதபோலீஸாரை கண்டித்து, எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நல்லகேணி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களுடன் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று காலை அங்கு வந்தனர்.
ஆனால், பாதுகாப்பு பணிக்கு வர வேண்டிய எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் நீண்டநேரமாகியும் அங்கு வரவில்லை.
எனவே, அப்பகுதி திமுக கவுன்சிலரான முத்துச்செல்வம் போலீஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் உரிய விளக்கம்அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, முத்துச்செல்வமும், அப்பகுதி மக்களும் நேற்று காலை எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய்தங்கம், போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஜூலை 25-ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முழு பாதுகாப்பு அளிப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.