தமிழகம்

திருச்சி | பாஜக பிரமுகர் சூர்யா சிவா வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல்: போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

திருச்சி: திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான் திருச்சி சிவா எம்.பியின் மகனான சூர்யா சிவா(34), சோமரசம்பேட்டை அருகேயுள்ள வாசன்வேலியில் வசித்து வருகிறார். இவர், பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார்.

விபத்துக்குள்ளான தனது காரை சீரமைக்க பணம் கொடுக்காததால், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை கடத்திச் சென்றதாக கன்டோன்மென்ட் போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், சூர்யா சிவா தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த சிலர் சூர்யா சிவா வீட்டின் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்தன.

இதைக்கண்ட சூர்யா சிவாவின் கார் ஓட்டுநர் ஆனந்தபாபு அவர்களிடம் சென்று கேட்டபோது, அவரையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸார் அங்குசென்றதும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், சூர்யா சிவா சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘தாக்குதலில் ஈடுபட்ட சாகுல் அமீது திமுகவைச் சேர்ந்தவர், அவருடன் வந்தவர்கள் திமுக ஆதரவாளர்கள் என தெரியவருகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் திமுகவினரின் தூண்டுதல் இருக்கும் என சந்தேகப்படுகிறேன்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT