வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து நகர்ந்து வருகிறது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 2 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் பலத்த மற்றும் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், மணிக்கு 50 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக காற்று வீசியதால் பாம்பன் ரயில் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.