சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்புப் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டி தொடக்க விழா வரும் 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உயரதிகாரிகள் ஷிவ்தாஸ் மீனா, கிருஷ்ணன், முருகானந்தம், ஜெகந்நாதன், ராஜேஷ் லக்கானி, அபூர்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடர்பான தொலைபேசி கையேட்டை தலைமைச் செயலர் வெளியிட்டார். இதேபோல, செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வரவேற்புப் பாடலை, ரகுமானும், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தும் சமூகவலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டனர்.
இலவச பேருந்துகள் இயக்கம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவசமாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக 5 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
இவை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து புறப்படும். மாமல்லபுரம் செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கான 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்கள் பேருந்து நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவசப் பேருந்து சேவை கிடைக்கும் வகையில் இவை இயக்கப்படுகின்றன.
அதேபோல, போட்டிகளைக் காணவரும் வெளிநாட்டவர், குறைவான கட்டணத்தில் மாமல்ல புரத்தை சுற்றிப்பார்ப்பதற்காக ஆட்டோக்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
மெட்ரோ ரயிலில் விளம்பரம்: ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் “நம்ம செஸ், நம்ம பெருமை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
விமானநிலையம்-விம்கோ நகர் மற்றும் சென்ட்ரல்-பரங்கி மலை ஆகிய இரு வழித்தடங்களில் செல்லும் சில மெட்ரோ ரயில்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.