சென்னை: மறு பிரேதப் பரிசோதனையில் தங்களது தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என மாணவி மதியின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை, மறு பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கவில்லை என்றுகூறி, மதியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "உயர் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று முன்தினம் நடைபெற்ற மறு பிரேதப் பரிசோதனையில் எங்களது தரப்பு மருத்துவரை அனுமதிக்கவில்லை.
எனவே, நாங்கள் பரிந்துரைக்கும் மருத்துவர் முன்னிலையில் மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.
அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, ‘‘பிரேதப் பரிசோதனை மாலை 4 மணிக்கு நடந்தது. ஆனால் அவரது பெற்றோருக்கு நண்பகல் 12.23 மணிக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
உரிய காலஅவகாசம் இருந்தும், அவர்கள் வரவில்லை. இந்த விவகாரத்தில் மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார். மீண்டும் கலவரம் நடந்துவிடக்கூடாது என்பதில்தமிழக அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், மறு பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை, தங்களது தரப்பு வல்லுநர் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வைத்திருக்கலாமே’’ என்று கேள்வி எழுப்பி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கோரிக்கை என்றாலும், இனி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம்’’ என்றுகூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மாநில அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் முறையீடு செய்தார்.
இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு நகலை நாளை (இன்று) தாக்கல்செய்ய உத்தரவிட்டார்.
அதேநேரம், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.