கள்ளக்குறிச்சி: மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியில், அரசின் அனுமதி பெறாமல் விடுதி இயங்கி வந்தது மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி பயின்ற பிளஸ் 2 மாணவி மதி, கடந்த 13-ம் தேதி சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தார். அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
பெற்றோர் தரப்பில், மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த 17-ம் தேதி நடந்த பெரும் கலவரத்தில் வன்முறை கும்பலால் அந்தப் பள்ளி சூறையாடப்பட்டது.
இந்நிலையில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தந்தனர். அக்குழுவினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் ஆகியோரிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறியதாவது:
மாணவியின் உயிரிழப்பு குறித்து முதற்கட்ட விசாரணையை நடத்தினோம். இந்த விசாரணையில் பள்ளி விடுதி முறையான அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்று நடத்தக் கூடாது.
‘பெண்களுக்கான தனியார் விடுதி நடத்துவோர் முறையான அனுமதி பெற வேண்டும்’ எனகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 3 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டும் இந்தப் பள்ளி நிர்வாகம் முறையான அனுமதி பெறவில்லை.
அவ்வாறு பெற்றிருந்தால், விடுதிக்கு காவலர், பெண்காப்பாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு, விதிமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதி இயங்கியிருக்கும். பள்ளி நிர்வாகம் விடுதிக்கு முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளதை காவல் துறைக்கு புகாராக அளித்து, முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்ய பரிந்துரைப்போம் என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்கள், ‘இப்பள்ளியில் ஏற்கெனவே சில மாணவர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் நிலவுகிறதே, அது தொடர்பாக விசாரித்தீர்களா?’ என கேட்டதற்கு, “அது தொடர்பான புகார் ஏதும் எங்களுக்கு வரவில்லை. பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில்தான் தற்போதைய விசாரணை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் 77 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள விடுதிகள் முறையான அனுமதி பெறப்பட்டு இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய இருக்கிறோம். அது தொடர்பாக இன்று அனைத்து மெட்ரிக் பள்ளிமுதல்வர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறோம்” என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.