தமிழகம்

உட்கட்சி பூசல் எதிரொலி: செய்யாறு தொகுதியை புறக்கணித்த ஸ்டாலின்

செய்திப்பிரிவு

உட்கட்சி பூசல் எதிரொலியாக, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்வதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தவிர்த்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியை, தொடர்ந்து 3-வது முறையாக கூட்டணி கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், சாலை மறியல் போராட்டம், சென்னையில் கலைஞர் அறிவாலயம் முற்றுகை, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுதல், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் திமுகவினர் ஈடுபட்டனர்.

செய்யாறில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற எ.வ.வேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அதிருப்தி அடைந்து, அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு செல்ல முயன்றவரை முற்றுகையிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் எதிரொலியாக, திருவண்ணா மலை மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பயணத் திட்டத்தில் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியை தவிர்த்து, மற்ற 7 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதுகுறித்து செய்யாறு தொகுதி திமுகவினர் கூறும்போது, “செய்யாறில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நடந்த நிகழ்வு, தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். அதன் காரணமாகவே, மு.க.ஸ்டாலின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இதுகுறித்து எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் கூறும்போது, “நேரத்தை கருத்தில் கொண்டு பிரச்சாரம் பயணத் திட்டத்தை வகுத்துள்ளனர்” என்றனர்.

SCROLL FOR NEXT