தமிழகம்

தடை செய்யப்பட்ட நிலத்தை பதிவு செய்ததாக சார் பதிவாளர்கள் உட்பட 3 பேர் இடைநீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: நில உரிமை பிரச்சினை தொடர்பாக தடை செய்யப்பட்டிருந்த நிலத்தை பதிவு செய்த விவகாரத்தில் திருவள்ளூர், கோபிசெட்டிபாளையம் சார் பதிவாளர்கள் உட்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிஏசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் உள்ளன.இந்த நிலங்களை யாருக்கும் பதிவு செய்யக் கூடாது என்று2018-ல் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் பலருக்கு பதிவு செய்து கொடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து, குழு அமைக்கப்பட்டு, தற்போது 63 பதிவு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேறொரு நிலத்தை பதிவு செய்த விவகாரத்தில் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பதில் பிரச்சினை எழுந்ததால், அந்த நிலத்தை யாருக்கும் பதிவு செய்து தரக் கூடாது என்று பதிவுத் துறை தலைவர், ஆட்சியர் 2012-ல் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட சார் பதிவாளர் சுமதி,போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை பதிவு செய்து கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, நேற்று அவரை இடைநீக்கம் செய்து பதிவுத் துறை ஐ.ஜி. சிவனருள் உத்தரவிட்டார்.

இதை அறியாத சுமதி, வழக்கம்போல நேற்று அலுவலகம் வந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த கணினி நுழைவு வேலை செய்யவில்லை.

இதனால், பதிவுக்கு வந்த பலரும்காத்திருந்தனர். சிறிது நேரத்தில், சுமதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு, பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்த பிறகே,இதுகுறித்து சுமதிக்கு தெரியவந்தது. தொடர்ந்து, பதிவு பணிகளை இணை சார் பதிவாளர் உமா சங்கரி மேற்கொண்டார்.

இதேபோல, இந்த நிலத்தின் ஒரு பகுதியை ஆவடியில் பதிவு செய்ததாக, பதிவு உதவியாளர் சிவகுமாரும், கோபிசெட்டிபாளையத்தில் போலி ஆவணப் பதிவுக்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் சுப்புராஜ் ஆகியோரும் நேற்றுபணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாரண்டஹள்ளி சார் பதிவாளர் மாரியப்பன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT