மதுரை/ திண்டுக்கல்/தேனி/கல்பாக்கம்: மதுரை, திண்டுக்கல், கூவத்தூரில் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். இதில் மதுரையில் கணக்கில் வராத ரூ.20 கோடி ரொக்கமும், கூவத்தூரில் முக்கிய ஆவணங்களும் பிடிபட்டன.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மகன்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணக்குமார், செந்தில்குமார். இவர்கள் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை சுற்றுச்சாலை, ராமநாதபுரம் சாலை பகுதிகளில் வீடுகள் கட்டி விற்க ஏராளமான நிலங்களை இவர்கள் வாங்கி குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனங்கள் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை புறநகர் பகுதிகளில் வாங்கியுள்ளதாகவும் வருமான வரித் துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதியில் உள்ள அந்த நிறுவன உரிமையாளர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் பிற இடங்களிலுள்ள கட்டுமான அலுவலகங்களில் சோதனையிட, நேற்று காலை 7 மணியளவில் 3-க்கும் மேற்பட்ட கார்களில் 12-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் அவனியாபுரம் பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து ஜெயபாரத் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மாலை வரை இச்சோதனை நடந்தது. இதுகுறித்து வருமான வரித் துறையினர் கூறும்போது, வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.20 கோடிக்கு மேல் ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்றனர்.
மதுரை- நத்தம்- துவரங்குறிச்சி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை மேற்கொண்டுவரும் ஆர்.ஆர்.இன்ப்ரா கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுக்குறிச்சியில் உள்ளது.
நேற்று காலை அங்கு சென்ற வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் அந்நிறுவனத்துக்கு சொந்தமாக ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள ஆர்.ஆர்.இன்ப்ரா புளூ மெட்டல் நிறுவனத்திலும் சோதனை நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரை அடுத்த வடபட்டினம் கிராமத்தில் ஆர்.ஆர். இன்ப்ரா கட்டுமான நிறுவன உரிமையாளர் முருகப்பெருமாளுக்குச் சொந்தமான பிரம்மாண்ட சொகுசு பங்களா ஒன்று கடற்கரையையொட்டி அமைந்துள்ளது. அங்கு, 7 பேர் கொண்ட வருமான வரி அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, பங்களா காவலாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சேடபட்டியில் மதுரையைச் சேர்ந்த சரவணப்பெருமாள், ராமு ஆகியோருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இக்கல்குவாரி ஓராண்டுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை அங்கு சென்ற வருமானவரி அதிகாரிகள், குவாரி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பதிவேடுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் கட்டுமான நிறுவனங்களை குறிவைத்து வருமானவரித் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.