தமிழகம்

கோயம்பேடு - அண்ணா சாலை பகுதிகளை இணைத்து சுற்றுவட்ட மெட்ரோ ரயில் இயக்க முடியுமா? - சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது மெட்ரோ ரயில் நிறுவனம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சாலைக்கு நேரடியாக சுற்றுவட்ட மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே 23 கி.மீ. தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே 22 கி.மீ. தூரத்துக்கு 2-ம் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த 2 வழித்தடங்களிலும் தினமும் 1.7 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

முதியவர்களுக்கு சிரமம்

இதில், சென்ட்ரல், விமான நிலையம், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை உள்ளது. ஆனால், கோயம்பேடு பகுதியில் இருந்து அண்ணா சாலை பகுதிக்கு நேரடி சேவை இல்லை. கோயம்பேடு பகுதியில் இருந்து ஆலந்தூர் அல்லது சென்ட்ரல் சென்று, வேறு மெட்ரோ ரயிலில் ஏறி, அண்ணா சாலை பகுதிக்கு செல்லவேண்டி உள்ளது.

அந்த இணைப்பு நிலையங்களில் வெவ்வேறு தளங்களுக்கு செல்வதும் முதியவர்கள், நோயாளிகளுக்கு சிரமமாக உள்ளது. தவிர, தினமும் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பகுதிகளில் இருந்து அண்ணா சாலை வழியாக அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, கோயம்பேட்டில் இருந்து அண்ணா சாலைக்கு நேரடி ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சவாலான திட்டம்

தற்போது வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் போன்ற நிலையங்களில் இருந்து அண்ணா சாலை பகுதிக்கு செல்வதானால் சென்ட்ரல் அல்லது ஆலந்தூர் சென்றுமாறிச் செல்ல வேண்டும். இதை தவிர்க்க, கோயம்பேடு - அண்ணா சாலை இடையே நேரடி மெட்ரோ ரயில் இயக்க முடியுமா என்ற திட்டம்பரிசீலனையில் உள்ளது. கோயம்பேடு- ஆலந்தூர் - அண்ணா சாலை நிலையங்கள் - சென்ட்ரல் ஆகியவற்றைஇணைத்து சுற்றுவட்ட ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.

இத்திட்டம் மிகவும் சவாலானது. அறிவிப்பு முறை, பயணிகளுக்கான தகவல் தொடர்பு முறை ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் குழப்பம் அடைவார்கள். சிக்னல் மற்றும் இதர தொழில்நுட்பங்களும் எவ்வித கோளாறும் இன்றி செயல்பட வேண்டும். எனவே, மிக கவனமாக இத்திட்டம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

சுற்றுவட்ட மெட்ரோ ரயில் சேவை அமலுக்கு வந்தால், கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற நிலையங்களில் ரயிலில் ஏறும் பயணிகள் ஆலந்தூரில் ரயில் மாறாமல், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட அண்ணா சாலை பகுதிகளுக்கு நேரடியாக செல்லலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT