தமிழகம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத்தின் நண்பர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யபட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர். அவர் மூலம்தான் சித்ராவை எனக்கு நன்றாக தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது நான் சாட்சியம் அளித்துள்ளேன்.

ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் நான் மட்டுமே சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். ஹேம்நாத்தால் என்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடியாட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதால், அவரை வெளியே சுதந்திரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார்.

உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக, ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT