‘மின்சாரம், கிரானைட், தாதுமணல், முட்டை என அனைத்திலும் இந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது’ என நடிகை குஷ்பு பேசினார்.
கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று முன் தினம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுகவினரும் பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தமிழகமெங்கும் ஊழல், லஞ்சம் பெருகியுள்ளது. நீதிமன்றங்களின் கண்டனத்துக்கு உள்ளான ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின் போது, ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்...’ என்று கூறுவதை விட்டுவிட்டு, ‘குடிமக்களால் நான்... குடிமக்களுக்காக நான்...’ என மாற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளால் தமிழகம் சீரழிந்து போயுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று ஜெயலலிதா கூறுகிறார். அவருக்கு சொந்தமான மது பான ஆலை மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வரும் நிலையில், மதுவிலக்கை அவர் எப்படி கொண்டு வருவார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழக மக்களுக்காக தொடர்ந்து இலவசங்களை வழங்கியதால், தற்போது ரூ.4 லட்சம் கோடி கடனில் தமிழகம் உள்ளது. மின்சாரம், கிரானைட், தாதுமணல், முட்டை என அனைத்திலும் இந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. இந்த ஆட்சிக்கு மாற்றம் வேண்டும் என கூறும் மக்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணியையே ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.