வேலூர் கொசப்பேட்டை பகுதியில் உள்ள ஈ.வெ.ரா.நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதற்காக, உதிரி பாகங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, அம்மாணவர்கள் பிளஸ் 2 படித்து வரும் நிலையில் அவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 அரசு மற்றும் அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 6 ஆயிரத்து 348 மாணவர்கள், 7 ஆயிரத்து 147 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 495 பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

இதற்காக, தனியார் மிதிவண்டி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கு மிதிவண்டிகளை சரிபார்த்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, பச்சை வண்ணத்தில் வழங்கப்பட்ட மிதிவண்டி இந்தாண்டு நீல வண்ணத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், நடப்பு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்குவதற்காக பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT