தமிழகம்

பள்ளிக் கலவரம் தொடர்பாக விசாரணை தீவிரம்: இதுவரை 22 சிறுவர்கள் உட்பட 300 பேர் கைது

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 22 சிறுவர்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனியார் பள்ளியை கண்டித்து மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அப்பள்ளிக்குள் வன்முறைக் கும்பல்புகுந்து வாகனங்கள், மேஜை, நாற்காலிகளை தீயிட்டுக் கொளுத்தியது. தடுக்க முயன்ற காவல்துறையினரும் காயமடைந்தனர்.

இந்த பெரும் கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜய பிரபாகரன் அளித்தப் புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் கடந்த 2 நாட்களில் 300 பேர் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 22 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். எஞ்சிய 280 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT