தமிழகம்

முதியோர், மாற்றுத் திறனாளி பயணிகள் வசதிக்காக முக்கிய ரயில் நிலையங்களில் பேட்டரி கார்களை அதிகரிக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ரயிலில் பயணிப்பதற்காக வரும்முதியோர், மாற்றுத் திறனாளி பயணிகளை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக்கு அழைத்துச் செல்லவும், ரயிலில் இருந்து இறங்கும் முதியோர்கள், மாற்றுத் திறனாளி பயணிகளை ரயில் நிலையத்துக்கு வெளியே அழைத்துச் சென்று விடவும் பேட்டரி கார்கள் உதவுகின்றன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் பேட்டரி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரிப்பதால், பேட்டரி கார்களை கூடுதலாக வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 பேட்டரி கார்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 பேட்டரி கார்களும், தாம்பரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் தலா 2 பேட்டரி கார்களும், சேலம், ஈரோடு, மேட்டுப்பாளையம், தஞ்சாவூர், திருநெல்வேலியில் தலாஒன்றும் என மொத்தம் 24 பேட்டரிகார்களை வழங்கியுள்ளோம்.

சென்னையில் பெரிய ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையங்களில் படிப்படியாக வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.

பெரிய ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் போன்றோர் விரைவு ரயில் பெட்டிகளை கண்டறிந்து பயணம் செய்வதுசிரமமாக உள்ளது. அவர்களுக்காக பேட்டரி கார் வசதியை விரிவுபடுத்த உள்ளோம். சென்னை சென்ட்ரலில் தற்போது 4 பேட்டரிகார்கள் இயக்கப்படுகின்றன.

இங்கு கூடுதலாக பேட்டரி கார்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதுபோல, எழும்பூர்,தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் பேட்டரி கார்களை அதிகரிக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT