கொசஸ்தலை ஆற்றில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஏராளமானோர் படகுகள் மூலம் சென்று ஆய்வு செய்தனர். படம்: ம.பிரபு 
தமிழகம்

கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைத்தால் வரும் 31-ல் போராட்டம்: சீமான் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, எண்ணூர் வடசென்னை அனல் மின் நிலையம் அருகே காட்டுக்குப்பம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க நாம் தமிழர் கட்சி சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் கோபுரம் அமைக்கப்படும் இடங்களைக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களுடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆற்றை மறித்து நடுவில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் ஆற்று நீர் எப்படி கடலில் கலக்கும். இதனால் ஆற்றில் இருக்கக் கூடிய மீன்கள் செத்து மிதக்கக் கூடிய நிலையை கண்கூடாக பார்த்தேன். இங்கு காற்றிலும், நிலத்திலும் உலர் சாம்பல் பரவி உள்ளது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்துவிட்டு ஆபத்து தரக்கூடிய நச்சு ஆலைகளை அரசு ஏற்று நடத்துகிறது.

ஒவ்வொரு தொழிற்சாலையும் அமைக்கப்படும்போது வளர்ச்சி என்கிறார்கள். கடனில் மட்டும்தான் வளர்ச்சி இருக்கிறது. இல்லையேல் அரசியல்வாதிகளிடம் உள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி ஏற்படவில்லை.

இந்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை மின்வாரியம் தொடர்ந்தால் வரும் 31-ம் தேதி இதே இடத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். ஆதலால் அரசு உடனே இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT