தமிழகம்

நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன்: வைகோ ஆவேசம்

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஏ.லாசர், போடி, ஆண்டிபட்டி தொகுதிகளின் தேமுதிக வேட்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வீரபத்திரன், கம்பம் தொகுதி த.மா.கா. வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து தேனி-அல்லிநகரம், போடி, கோம்பை, கம்பம் ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறு வைகோ நேற்று பிரச்சாரம் செய்தார். அல்லிநகரத்தில் அவர் பேசியதாவது:

பணத்தை கொடுத்து நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கும் அதிமுக, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி வருகின்றனர்.

கருத்து கணிப்பை வாக்காளர்கள் நம்ப வேண்டாம். 150 இடங்களில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும். விஜயகாந்த் முதல்வர் ஆவது உறுதி.

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் ஊழல் செய்து சொத்து சேர்த்த திமுக, அதிமுக மந்திரிகள், மாவட்டச் செயலாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். நேர்மையான அதிகாரிகளின் நலன் பாதுகாக்கப்படும்.

தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று நிறுத்தியுள்ளேன். இடதுசாரிகள் நியூட்ரினோ திட்டத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், நான் எதிர்க்கிறேன். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த விட மாட்டேன் என்றார்.

SCROLL FOR NEXT