சென்னை: “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
இந்த கட்டண உயர்வு மின்சாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ. 94,312 கோடி மேலும் அதிகரித்து, மார்ச் 31ம் தேதி வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து தற்சமயம் (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன் வாங்கிய நிதியின் வட்டியானது 259% அதிகரித்து 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பெரும்பாலான மின் திட்டங்கள், அத்திட்டங்களுக்கான உரிய காலத்திற்க்குள் முடிக்கப்படாத காரணத்தினால் மூலதனச் செலவு கடுமையாக அதிகரித்ததுடன் கட்டுமானத்தின் மீதான வட்டி ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற 10 ஆண்டுகளில், துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தொடரமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புப் பணிகள் நீடித்தும், இது போன்ற திட்டங்களின் நிலைத் தன்மையைக் கருத்தில் கொள்ளாமலும், செலவின பலனின் மீது கவனம் செலுத்தாமல் பகுப்பாய்வு செய்ததின் காரணத்தினாலும் கடன் சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.
மின் விநியோக காலங்களின் கடன்களை 75% எடுத்துக்கொண்டு, அதன் மூலம் அசல் மற்றும் வட்டியை குறைத்து, நிதிநிலைமையை சீராக்குவதே உதய் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 30.09.2016 அன்று நிலுவையில் உள்ள மொத்த கடன் ரூ.81,300 கோடியாக இருந்த நிலையில், மின் விநியோக கழகங்களின் கடனில் ரூ.22,815 கோடியை மட்டுமே 2017-18 முதல் 2020-21 ஏற்றுக் கொண்டது. அவ்வாறாக பெறப்பட்ட கடனிற்கான வட்டியை ஈடுசெய்யும் பொருட்டு வீட்டு உபயோக பிரிவிற்கான மானியம் 2017ம் ஆண்டு குறைக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதய் திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்ததுள்ளது. இதன்மூலம், எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.16,488 கோடிகளாக இருந்த மின் கொள்முதல் கட்டணம் 2020-2021ம் ஆண்டில் 127% அதிகரித்து ரூ.37,430 கோடிகளாக உள்ளது. அதேபோல், கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.5,462.8 கோடிகளாக இருந்த எரிபொருள்களுக்கான செலவுத் தொகை 2020-2021ம் ஆண்டில் 21% அதிகரித்து ரூ.6610 கோடிகளாக அதிகரித்து உள்ளது. கடந்த, 2011-2012ம் ஆண்டில், ரூ.4,125.20 கோடியாக இருந்த பணியாளர்களுக்கான செலவுத் தொகை 2020-2021ம் ஆண்டில் 161% அதிகரித்து, ரூ.10,777.53 கோடியாக உள்ளது.
ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு 0.5% கூடுதல் கடன் வாங்குவதற்கு கட்டணத் திருத்தத்துடன் மின்துறை சீர்திருத்தங்களின் கட்டாய நிபந்தனையை உருவாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான REC மற்றும் PFC சிறப்புப் பணப்புழக்கத் திட்டத்தின் (ஆத்மநிர்பார்) கீழ் ரூபாய் 30,230 கோடி கடனை அனுமதிக்கும்போது, வருடாந்திர கட்டண திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனுமதித்துள்ளது. கட்டணத் திருத்தம் செய்யப்படாததால், ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மீதமுள்ள ரூ.3,435 கோடியை REC/PFC நிறுவனங்கள் நிறுத்தி வைத்ததால் மின் உற்பத்தியாளர்களுக்கு தீர்வு காணப்படவில்லை.
ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின்படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ் நிதியை வெளியிடுவதற்காக மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். அவ்வாறு மின் கட்டணம் திருத்தம் செய்யப்படாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 10,793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது மற்றும் அந்த திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது. மின் விநியோக நிறுவனங்கள் உட்பட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குதற்கான வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கட்டாய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண மனுவை தாக்கல் செய்யவேண்டும். CERC/APTEL போன்ற பல சட்ட அமைப்புகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கட்டணம் திருத்தம் செய்யாதது குறித்து அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிற பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை அதிகரிப்பது குறித்தும் பலமுறை குறிப்பிட்டுள்ளன.
ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரத்தின் சராசரி விலை அதிகரித்து மின் வழங்கல் விலை மற்றும் சராசரி வருவாய்த் தேவைக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என அறிவித்த போதிலும், மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் அதிக விலைக்கு கடந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று விரிவாக பேசினார்.
புதிய மின் கட்டணம் – முக்கிய அம்சங்கள்
தாழ்வழுத்த மின் கட்டணம்
வீட்டு மின் உபயோகம்
வீட்டு உபயோக மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10% அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற நூலகங்களுக்கான மின் கட்டணம்
கிராமப்புற நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு அதாவது 30 % குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிற தாழ்வழுத்த மின் கட்டணம்
உயர் மின்னழுத்தத்திற்கான மின் கட்டணம்
பிற உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள்