சென்னை: சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. கரோனா தொற்றில் இருந்துகுணமடைந்து வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
நாடாளுமன்ற வளாகம் மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, உதவிதேர்தல் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டுவந்தனர்.
பார்வையாளர் ஆலோசனை
தமிழகத்துக்கான தேர்தல் பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சட்டப்பேரவை செயலர் உள்ளிட்டோருடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவை செயலக குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும் அளிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தால்வழங்கப்பட்ட பேனாவை பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
இதற்கிடையில், கரோனா காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் இன்றுவீடு திரும்புகிறார். கரானா வழிகாட்டுதல்களை பின்பற்றி, அவரும் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்து இன்று வாக்களிக்க உள்ளார்.
வாக்களிக்கும் ஓபிஎஸ், அமைச்சர்
கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நாசர் ஆகியோர் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் கவசஉடை அணிந்து வந்து வாக்களிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜ் (நாகை), கணேசமூர்த்தி (ஈரோடு), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை) ஆகியோரும் சென்னையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் வாக்களிக்க உள்ளனர்.