ஒகேனக்கல் காவிரியாற்றில் 3-வது நாளாக நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக தொடர்ந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து, இரு அணைகளின் பாதுகாப்பைக் கருதி காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு சுமார் 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் அதே அளவு நீடித்தது.
இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
வெள்ளப்பெருக்கால், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் சவாரி செல்லவும் தடை நீடிக்கிறது.
களையிழந்த ஒகேனக்கல்
ஆடி மாதம் முதல் நாளில் சுற்றுலாப் பயணிகள், புதுமண தம்பதிகள் ஒகேனக்கல் காவிரியாற்றில் புனிதநீராடி, புத்தாடை அணிந்து, அங்குள்ள காவிரி அம்மனை வழிபடுவது வழக்கம். தற்போது, பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடி மாதப்பிறப்பான நேற்று பயணிகள் வருகையின்றி ஒகேனக்கல் களை யிழந்து காணப்பட்டது.