முதல்போக சாகுபடிக்காக, கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணேகொல்புதூர் கிராமத்தில் நிலத்தை சீர் செய்ய டிராக்டர் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. 
தமிழகம்

கிருஷ்ணகிரி அணை கால்வாய்களில் நீர் திறப்பு: முதல்போக நெல் சாகுபடிக்காக நிலத்தை சீர் செய்யும் விவசாயிகள்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனக் கால்வாய்களில் நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து, முதல்போக சாகுபடிக்கு நிலத்தை விவசாயிகள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலமும், கிருஷ்ணகிரி அணையின் மூலம் 9,012 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. இவ்விரு அணைகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை முதல்போக பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே வரை 2-ம் போக பாசனத்துக்கும் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

நிகழாண்டில், தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மே மாதம் பெய்த தொடர் மழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கடந்த 6-ம் தேதி முதல் வலது மற்றும் இடதுபுறக்கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று வலதுபுறக்கால்வாய் வழியாக விநாடிக்கு 92 கனஅடியும், இடதுபுறக்கால்வாய் வழியாக 86 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நீர்திறப்பை தொடர்ந்து, முதல்போக சாகுபடிக்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை உழவு செய்து சீர் செய்தல், நாற்று விடுதல், நடவு செய்தல் உள்ளிட்ட சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் திருப்திகரமாக உள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு செய்யும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், நடவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT