தமிழகம் முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ’ நீட்’ நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஒரு மையத்துக்கு தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள். | படங்கள்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கடினம் என மாணவர்கள் கருத்து: கடும் சோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது. வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இந்த தேர்வை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 31 மையங்களில், 20 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.

கரோனா பரவல் அச்சம் காரணமாக தேர்வு மையங்களில் தனி நபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு பிரத்யேகமாக என்.95 முகக் கவசம் வழங்கப்பட்டது. இதுதவிர, மாணவ, மாணவிகள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், தோடு, கொலுசு, நகைகள், காப்பு உள்ளிட்டவை அணிந்து செல்ல மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தண்ணீர் மற்றும் சானிடைசர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, 1.30 மணிக்குப் பின்பு தேர்வெழுத வந்தவர்களை, தேர்வு மையத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் தாமதமாக வந்த மாணவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, ஆள்மாறாட்ட மோசடியைத் தவிர்க்க, ஹால் டிக்கெட்டில் அசல் புகைப்படத்தை ஒட்டி, பெற்றோர் கையொப்பம் பெற்றுவந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களுடன் வந்த பெற்றோர், நுழைவுவாயிலிலேயே காக்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் சற்று கடினம் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “உயிரியல், வேதியியல் பிரிவு கேள்விகள் எளிதாகக் கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. வழக்கம்போல, தமிழ் மொழிபெயர்ப்பில் சில இடங்களில் பிழைகள் காணப்பட்டன.

முதல்முறை எழுதுபவர்களைவிட, 2, 3-ம் முறை தேர்வு எழுதுபவர்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்திருக்கும். உயர்கல்வி சேர்க்கையைக் கருத்தில்கொண்டு, தேர்வு முடிவை விரைந்து வெளியிட வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT