தமிழகம்

திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக தவித்த 317 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் தாலுகா புதுக்குப்பம் என்ற கிராமத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று திருவள்ளூர் வருவாய்த்துறை அலுவலர் ஜெயச்சந்திரனிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து, அவர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை சம்மந்தப்பட்ட செங்கல் சூளைக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு வேலை செய்த 102 ஆண் தொழிலாளர்கள், 127 பெண் தொழிலாளர்கள் மற்றும் 88 குழந்தைகள் உள்ளிட்ட 317 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலம், நவ்ரங்பூர் மாவட்டம், போலங்கிர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேலும், மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் அவர்களு டைய சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT