தமிழகம்

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைநிறுத்தம்: நோயாளிகள் கடும் அவதி

செய்திப்பிரிவு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்கள் சனிக்கிழமை இரண்டு மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தெபேசான் பேட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள், உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

ஆனால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து சுகாதாரத் துறை இயக்குநரோ அல்லது சுகாதாரத் துறை அதிகாரிகளோ யாருமே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தவில்லை. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லை என்பதாலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதாலும் போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் குமாரவேலு சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் ஊழியர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அறித்தார். இதனை ஊழியர்கள் ஏற்றுக்கொண்டு பணிக்கு திரும் பினர். சுமார் 2 மணி நேரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிப்படைந்தனர்.

SCROLL FOR NEXT