முற்றிலும் தீயிட்டு எரிக்கப்பட்ட பள்ளியின் கட்டிடம். 
தமிழகம்

சின்னசேலம் மாணவி உயிரிழந்த விவகாரம் | பாஜகவைச் சார்ந்த உரிமையாளர்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர்.

கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமையாளரான ரவிக்குமார், மாவட்ட பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவில் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் இருமுறை ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சிக்கு இடமளித்து உதவியதாகவும் கூறப்படுகிறது.

இதனை மையமாகக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியில் அதிகம் சேதம் ஏற்படுத்தினரா என்ற கோணத்திலும் போலீஸார் தற்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

வன்முறைக்கு வித்திட்ட வாட்ஸ்அப் குழு

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், ஒருபுறம் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஸ்ரீமதி என்ற பெயரில் ஒருவர் உருவாக்கிய வாட்ஸ்அப் குழுவில் போராட்டம் தொடர்பான செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

அத்துடன் விஜய் படத்தின் மாஸ்டர் பட வசனங்களை மீம்ஸ்களாக பதிவிட்டு, போராட்டக்கார்களை கனியாமூருக்கு திரட்டியதில் பெரும்பங்கு இருந்ததாக பள்ளி தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

போராட்டக்காரர்களால் வகுப்பறையில் இருந்து வீசப்பட்ட புத்தகங்கள். படம்: எம்.சாம்ராஜ்

இதனால்தான் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டு பள்ளியில் பெரும் சேதத்தை ஏற்படுத்த காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்ட பள்ளியின் பிரதான கட்டிடம்.

முதன்மைக் கல்வி அலுவலர் மவுனம்

மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 5 நாட்களாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அப்பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து எந்த அறிக்கையும் கோரவில்லை.

பள்ளி நிர்வாகம் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து காவல்துறை மட்டுமே இந்த விவகாரத்தை கையாண்டதால்தான் கலவரம் ஏற்பட காரணமாயிருந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT