மதுரை: மதுரையில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 55 வயதான விவசாயி, மருத்துவராகி பொது மக்களுக்கு சேவை புரிய போவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜியக்கொடி (55). தற்போது, மதுரை மாடக்குளம் பகுதியில் வசிக்கிறார். பிஎஸ்சி இயற்பியல் முடித்துவிட்டு, விவசாயம் பார்க்கிறார். இவருக்கு சக்திபெருமாள், வாசுதேவன் என்ற இரு மகன்கள் உள்ளனர். வாசுதேவன் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். சக்திபெருமாள் சொந்தமாக கட்டிட ஒப்பந்த நிறுவனம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், 55 வயதான ராஜியக்கொடி, இவ்வாண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தார். இதற்காக அவர், கடந்த ஓராண்டாக்கு மேலாக பயிற்சி எடுத்துள்ளார். நேற்று தேர்வு நடந்த நிலையில், அவருக்கான தேர்வு மையமாக மதுரை நான்கு வழிச்சாலையிலுள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரது மகன் சக்தி பெருமாளுடன் தேர்வு மையத்திற்கு நேற்று மதியம் 12 மணிக்கு வந்தார். வளாகத்தில் தேர்வெழுத வந்திருந்த பிற மாணவ, மாணவிகளும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதன்மூலம் எல்லோரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார். அவரது மகன் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தி அவருக்கு ''பெஸ்ட் ஆப் லக்'' சொல்லிதேர்வு மையத்திற்குள் 1 மணிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஏற்கெனவே, நான் பிளஸ்-2 முடித்த காலத்தில் (எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது) எம்பிபிஎஸ் படிக்க ஆசைப்பட்டு நுழைவுத்தேர்வு எழுதினேன். இதில் தோல்வியை கண்ட நிலையில், பிஎஸ்சி படித்துவிட்டு, விவசாயப் பணியை தொடர்ந்தேன். எப்படியாவது மகன்களை எம்பிபிஎஸ் படிக்க வைக்க முயற்சித்தேன்.
2 வது மகன் கடலூரில் மருத்துவம் படிக்கிறார். தற்போது, நீட் தேர்வு எழுத எவ்வித வயது வரம்பும் இல்லை என்பதால், எனக்கு ஆர்வம் வந்தது. நீட் தேர்வுக்கு எனது மகன் வாங்கி படித்த பயிற்சிக்கான கையேடுகளை பயன்படுத்தி ஓராண்டாக படித்தேன். தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்ததால் தேர்வுக்கு விண்ணப்பித்தேன்.
கல்விக்கு வயது என்பது ஒரு தடை இல்லை. இதை உணர்த்தும் வகையிலும், நீட் தேர்வு குறித்து தற்போதைய மாணவர்களுக்கு பயம் இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இத்தேர்வை எழுதுகிறேன்.
தேர்வுக்கு முழு அளவில் தயராகியுள்ளேன். நிச்சயம் வெற்றி பெற்று மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வேன். மருத்துவரானாலும், நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஒதுபோதும் கைவிட மாட்டேன்.'' இவ்வாறு அவர் கூறினார்.