மதுரை: ரயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கை குறித்து பாதுகாப்புக் குழுவினர் செயல்விளக்கம் நடத்தி காட்டினர்.
மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்டது. இதை விபத்தாகக் கருதி ரயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் மதுரையில் இருந்து கூடல்நகருக்கு வேகமாகச் சென்றது.
ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கூடல்நகருக்கு விரைந்தனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 30-க்கும் மேற்பட்டோர் துணை ஆணையர் எஸ்.வைத்தியலிங்கம் தலைமையில் கூடல்நகர் வரவழைக்கப்பட்டனர்.
ரயில் பெட்டி கவிழ்ந்திருந்த பகுதி ரயில்வே பாதுகாப்பு படையினரால் ஒளிரும் ரிப்பன் வேலி மூலம் பாதுகாக்கப்பட்டது. ரயில் பெட்டியின் மேல் பகுதி, பக்கவாட்டு பகுதிகளில் துளையிடப்பட்டு காயம் அடைந்த பயணிகள் வெளியே மீட்கப்பட்டனர்.
அருகில் இருந்த ரயில்வே மருத்துவக் குழு சார்பில் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பயணிகள் தகவல் மைய பயணச் சீட்டு பணத்தை திரும்ப அளிக்கும் அலுவலகம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆண்டனாவுடன் நவீன தொலைத்தொடர்புக் கருவிகளும் நிறுவப்பட்டிருந்தன.
கவிழ்ந்திருந்த ரயில் பெட்டி கிரேன் மூலம் தூக்கப்பட்டு ரயில் பாதையில் வைக்கப்பட்டது. ரயில்வே முதுநிலை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை தொலைத்தொடர்பு அதிகாரி ராம்பிரசாத், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் சதீஸ் சரவணன், முதல் நிலை ரயில் இயக்க அதிகாரி மது, உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார், உதவி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சுபாஷ் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படை துணை ஆணையர் வைத்தியலிங்கம் கூறுகையில், ‘‘ இந்த ஒத்திகை நிகழ்ச்சி மூலம் ரயில்வே துறை,தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை பரஸ்பரம் மற்றும் விரைவான மீட்பு பணிக்கான தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொண்டோம்.’’ என்றார்.