தமிழகம்

மதுரை | 21 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருப்பது விசுவாசத்துக்கு கிடைத்த பரிசு: செல்லூர் கே.ராஜூ பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை: 21 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருப்பது விசுவாசத்துக்கு கிடைத்த பரிசு என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, அமைப்புச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 50 ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்காக பாடுபட்டுள்ளேன். நான் கேட்காமலேயே பழனிசாமி என்னை அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளார். பதவி என்பது உழைப்புக்கும், விசுவாசத்துக்கும், செயல்பாட்டுக்கும் கிடைக்கக் கூடியது.

2001-ம் ஆண்டு ஜக்கையன் இல்ல திருமண விழாவுக்கு வந்த ஜெயலலிதா, என்னை பார்த்து கார்டனுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற என்னை மாவட்டச் செயலாளராக நியமிப்பதாகத் தெரிவித்தார். அப்போது கட்சிக்கும், தனக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அன்றுமுதல் இன்றுவரை கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன். அதற்கு கிடைத்த பரிசுதான் இந்த பதவி.

ஒருமுறை திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு சென்ற நானும் மு.க.அழகிரியும் பக்கத்தில் நிற்பதுபோல் மார்பிங் செய்த புகைப்படத்தை சிலர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினர். அப்போது ஜெயலலிதா என்னை அழைத்து, ‘‘நம்மை நம்பி கட்சித் தொண்டர்கள் இருக்கின்றனர்.

திமுகவை எதிர்த்துதான் அதிமுக உருவாக்கப்பட்டது. நீங்களே பொதுவெளியில் திமுகவினரின் இல்ல விழாவுக்குச் செல்லவது சரியா? இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இனிமேல் இடம் தராதீர்கள்’’ என்று அறிவுரை வழங்கினார். அன்று முதல் இன்று வரை நான் திமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. அதனால்தான் 21 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருக்கிறேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு விசுவாசத்துடன் இருந்தேனோ, அதேபோன்று பழனிசாமிக்கும் விசுவாசமாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT